513 மருத்துவர்கள் பலி; ஒரே நாளில் 2.21 மில்லியன் பரிசோதனைகள்
மும்பை: மகாராஷ்டிராவில் கிருமித்தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இனி 'கொவிட் 19' நோயாளிகள் யாரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 18 மாவட்டங்களில் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி மகாராஷ்டிராவில் அனைத்து 'கொவிட் 19' நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிராவில் நாள்தோறும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
கடும் கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் குறையத் தொடங்கி தற்போது அன்றாட பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது.
தலைநகர் மும்பையிலும் கொரோனாவின் தாக்கம் வெகுவாகக் கட்டுப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 325,000ஆக உள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே, 18 மாவட்டங்களில் லேசான தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர் என்றும் இனி அனைத்து நோயாளிகளும் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறுவர் என்றும் தெரிவித்தார்.
இதற்காக கூடுதல் சிகிச்சை மையங்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாவட்ட ஆட்சியர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
ஒரே நாளில் 2.21 மில்லியன் பரிசோதனைகள்
இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று முன்தினம் 208,921 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியது. தற்போது 2.49 மில்லியன் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 295,955 பேர் தொற்றுப் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதில் இந்திய சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 2.21 மில்லியன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
513 மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் நாட்டில் 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 103 மருத்துவர்கள் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. பீகாரில் 96, உத்தரப்பிரதேசத்தில் 41, அசாமில் 6, தமிழகத்தில் 18, மராட்டியத்தில் 15 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அச்சங்கம் மேலும் கூறியுள்ளது.

