'போயிங் 777' விமானத்தில் துபாய் சென்ற ஒரே ஒரு பயணி
மும்பை: 360 பயணிகளை சுமந்து செல்லக்கூடிய 'போயிங் 777' விமானத்தில் ஒரு பயணி மட்டுமே பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் பவேஷ் ஜாவேரி. 40 வய தான இவர் கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார். கடந்த மே 19ஆம் தேதி மும்பையில் இருந்து இவர் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்றார். ஆனால் அன்றைய தினம் வேறு எந்தப் பயணியும் அந்த விமானத்தில் செல்ல முன்பதிவு செய்யவில்லை. அதனால் ஜாவேரி மட்டுமே விமானத்தில் பறந்தார். "நான் விமானத்திற்குள் நுழைந்ததும் அதிலிருந்த விமானப் பணிப்பெண்கள் கைதட்டி வரவேற்றனர். கடந்த 20 ஆண்டுகளில் நான் மும்பைக்கும் துபாய்க்கும் இடையே 240 முறை பறந்துள்ளேன். ஆனால், இதுதான் எனது சிறந்த பயணமாக அமைந்தது. பணத்தால் இத்தகைய அனுபவங்களை வாங்க இயலாது," என்கிறார் பவேஷ் ஜாவேரி.
மோடி: இதுபோன்ற நெருக்கடியை மனிதகுலம் சந்தித்ததில்லை
புதுடெல்லி: கொரோனாவை வெற்றிகொள்ள தடுப்பூசிகள் மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த நூற்றாண்டில் இதுபோன்ற ஒரு பெருந்தொற்று நெருக்கடியை மனிதகுலம் எதிர்கொண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "கொரோனா தொற்று அகன்ற பிறகும் உலகம் பழையபடி இருக்காது. கொரோனா தொற்றுக்கு முன், தொற்றுக்குப் பின் என்றுதான் வருங்காலத்தில் நாம் பழைய விஷயங்களை நினைவுகூர்வோம்," என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கங்கை நதியை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள்
லக்னோ: கங்கை நதியைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கங்கையில் மனித உடல்கள் வீசப்படுவது தடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் கிராமப்புற பகுகதிகளில் சுகாதாரப் பணிகள் கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்
புதுடெல்லி: சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைவராக உள்ளார். இவர் இதற்கு முன் மகாராஷ்டிர மாநில காவல்துறை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

