வங்கிக் கடன் மோசடி: மெகுல் சோக்சி கைதானார்

1 mins read
32e2a35e-ef8d-4ea8-b275-70380e07621b
-

புதுடெல்லி: பஞ்சாப் வங்கிக் கடன் மோசடியில் தொடர்புடைய தொழிலதிபர் மெகுல் சோக்சி (படம்), டொமினிகா தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் தலைமறைவானார்.

அவர் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஆன்டிகுவா தீவுக்குத் தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.

அங்கிருந்து அவரை நாடு கடத்த இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதை அறிந்த மெகுல் சோக்சி கடந்த 23ஆம் தேதி ஆன்டிகுவாவில் இருந்தும் மாயமானார். இதனால் அவரைக் கண்டவுடன் கைது செய்ய இன்டர்போல் காவல் அமைப்பு நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில் ஆன்டிகுவாவின் அண்டைத் தீவான டொமினிகாவில் அவர் போலிசாரிடம் சிக்கினார்.

இதையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என டொமினிகா அரசிடம் ஆன்டிகுவா அரசு வலியுறுத்தி உள்ளது. மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற்றுள்ளார் என இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.