கோல்கத்தா: யாஸ் புயலின் கோரத்தாண்டவத்தால் பலியானோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
புயல் பாதித்த மாநிலங்களில் ராணுவம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
யாஸ் புயல் நேற்று முன்தினம் ஒடிசாவில் கரையைக் கடந்த பின்னர் வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுமார் நூறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் புயல் கரையைக் கடந்த 72 மணி நேரத்துக்குப் பிறகே சேதங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக மேற்கு வங்கத்தில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவிலும் மேற்கு வங்கத்திலும் 113 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார்.
பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை அவர் பாராட்டினார். மேலும் புயல் பாதித்த பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மின் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

