'ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறுவது கவலையளிக்கிறது'
நியூயார்க்: இந்தியா அமெரிக்கா இடையேயான உறவானது உலக அளவில் மிகவும் முக்கியமானது என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையேயான உறவு நீண்டகாலமாக நீடித்து வரும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அடிப்படையான, சமூக - புவிசார் அரசியல் சார்ந்த ஒருங்கிணைப்புகளை எவ்வாறு செயல்பாட்டுக்குரிய கொள்கைகளாக மாற்றுவது என்பதுதான் வாஷிங்டன், புதுடெல்லி முன் தற்போதுள்ள சவால் என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவி ஏற்ற பிறகு அவரை முதலில் சந்திக்கும் முதல் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜெனரல் மெக் மாஸ்டருடன் காணொளி வழி பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், 'வியூக கூட்டணிக்கான வாய்ப்புகளும் சவால்களும்' என்ற தலைப்பில் தமது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
அரசியல் காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது துருப்புக்களைத் திரும்பப் பெறுவது இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் வளர்ந்து ஆளாகியுள்ள தலைமுறைக்கு அதற்கு முந்தைய 20 ஆண்டுகள் நாடு எப்படி இருந்தது என்பது தெரியாது என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
"இருபது ஆண்டுகால செயல்பாட்டால் விளைந்த நன்மைகளை இன்றைய அரசியல் சூழல்களின் அடிப்படையில் அவ்வளவு எளிதில் இழந்துவிடக் கூடாது.
"ஒருவேளை நிலைமை மோசமடைந்தால் அங்கே என்ன நடக்கும் என்பது குறித்து மக்கள் கவலைப்படுவதாக கருதுகிறேன். அங்கு அடுத்து யார் பொறுப்பேற்றுக் கொள்வார் என்பது முக்கிய விவகாரமாக உள்ளது.
"அதற்கு தீர்வு காணாமல் அமெரிக்கா துருப்புக்களை விலக்கிக்கொண்டால் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை," என்று அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறினார்.
இதுகுறித்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் இதர உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தாம் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புகள் முழுமையாக வெளியேறும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா.

