புதுடெல்லி: நாடு முழுவதும் கறுப்புப் பூஞ்சை நோய் பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் மருந்தை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க மருந்து நிறுவனம் முன்வந்துள்ளது.
'அம்ஃபோடெரிசின்-பி' வகை ஊசிகள் கறுப்புப் பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் இந்த வகை மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் இந்தப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 'கிலீட்' gilead நிறுவனம் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் ஊசி மருந்தை இந்தியாவுக்கு அனுப்பத் தொடங்கி உள்ளது.
மொத்தம் ஒரு மில்லியன் ஊசிகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், ஏற்கெனவே 121,000 ஊசிகளை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் 85,000 ஊசிகள் எந்த நேரத்திலும் இந்தியாவைச் சென்றடையும் என்றும் அந்நிறுவனம் கூறி உள்ளது.
இதற்கிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் வாரத்திலேயே ஸ்டீராய்டு மருந்து வழங்கப்படுவதுதான் கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார். எனவே, கொரோனா நோயாளிகளுக்கு இரண்டாவது வாரத்தில் இருந்துதான் ஸ்டீராய்டு வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை 11,717 பேர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக குஜராத்தில் 2,859 பேரும் மகாராஷ்டிராவில் 2,770 பேரும் பூஞ்சை நோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

