பிறந்தநாளை சிறையில் கழித்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்
புதுடெல்லி: முன்பகை காரணமாக இளம் மல்யுத்த வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஏற்கெனவே கைதான நிலையில், கொலையில் உடந்தையாக இருந்ததாக அவரது கூட்டாளிகள் நால்வர் பிடிபட்டனர். இந்நிலையில் புதன்கிழமை தனது பிறந்தநாளை சிறையில் கழித்துள்ளார் சுஷில் குமார். வடக்கு ரயில்வேயில் வேலை பார்த்து வந்த நிலையில், அவரைப் பணியிடை நீக்கம் செய்வதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு 50 மில்லியன் தடுப்பூசிகள் வழங்க ஃபைசர் நிறுவனம் தயார்
புதுடெல்லி: இந்தியாவுக்கு 50 மில்லியன் தடுப்பூசிகளைத் தர ஃபைசர் நிறுவனம் முன்வந்துள்ளது. அவற்றை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்தலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. மாநில அரசுகளுக்குத் தடுப்பூசிகளை நேரடியாக விற்க இயலாது என்றும், இந்திய அரசுடன் மட்டுமே விற்பனை குறித்துப் பேசமுடியும் என்றும் ஃபைசர் நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஜூலை முதல் அக்டோபர் இறுதிக்குள் 50 மில்லியன் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
புதுவை எம்எல்ஏக்கள் பதவியேற்பு
புதுவை: புதுவையில் தேர்தல் முடிந்து 24 நாட்களுக்குப் பிறகு ரங்கசாமி உள்பட அம்மாநிலத்தின் அனைத்து எம்எல்ஏக்களும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகி உள்ளது. பாஜகவின் சில கோரிக்கைகளை முதல்வர் ரங்கசாமி ஏற்க மறுத்துவிட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்வு புதுவை ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்றது.
தமிழில் பொறியியல் புத்தகங்கள்
புதுடெல்லி: ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்கள் தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய 8 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பு பணி 90 விழுக்காடு முடிவடைந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

