தனி உரிமை விவகாரம்: வாட்ஸ் அப் வழக்கு; மத்திய அரசு விளக்கம்

தனி உரிமை விவகாரம்: வாட்ஸ் அப் வழக்கு; மத்திய அரசு விளக்கம்

2 mins read
ebb9f947-e072-4ccf-bd0e-0477af7d7425
-

புதுடெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனிமனித உரிமைக்கு எதிரானவை அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்திய அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. இந்தப் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு செயல்பட சமூக ஊடகங்களுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

புதிய விதிமுறைகளை ஏற்றுச் செயல்பட கூகல், ஃபேஸ்புக் சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. வாட்ஸ்அப் நிறுவனம் புதிய விதிமுறைகள் தனி உரிமையைப் பாதிக்கும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த சட்ட நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான முயற்சி என்றும் அந்த அமைச்சு சாடியுள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் சட்டரீதியான குறுக்கீடுகளை சமூக ஊடக நிறுனவங்கள் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இந்தியா கேட்பது மற்ற நாடுகள் வலியுறுத்துவதில் இருந்து மிகவும் குறைவு எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இடைநிலை வழிகாட்டுதல்கள் தனிஉரிமைக்கு எதிரானவை என்று வாட்ஸ்அப் தவறாக சித்திரிக்க முயற்சிப்பதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு கூறியுள்ளது.

அனைத்துக் குடிமக்களின் தனி உரிமையைக் காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் அதேநேரத்தில் சட்டம் ஒழுங்கையும் தேசியப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் கடமை அரசுக்கு உள்ளது என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்திய அரசின் கருத்துகளை அனைத்துலக அளவில் ஒலிக்கச் செய்யும் வகையில் புதிய உலக செய்தி அலைவரிசையை தொடங்க மத்திய அரசு விரும்புவதாக 'ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

பிரான்ஸ்24, பிபிசி வேர்ல்ட் போன்ற அலைவரிசைகளைப் போல் உலகளாவிய விஷயங்களை அலசும் வகையில் இந்த செய்தி அலைவரிசை செயல்படும் எனத் தெரிகிறது.