புதுடெல்லி: தெற்காசியாவில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனைக் கடந்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, கொரோனா இரண்டாவது அலை பரவாமல் தடுக்க கடுமையாகப் போராடி வருவதாக 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' செய்தி தெரிவிக்கிறது.
தெற்காசிய பகுதியைச் சேர்ந்த இந்தியா, பங்ளாதேஷ், பாகிஸ்தான், பூடான், நேப்பாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில்தான் உலகளவிலான ஒட்டுமொத்த கொரோனா தொற்றுச் சம்பவங்களில் 18 விழுக்காடு பதிவாகி உள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பால் உலகளவில் உயிரிழந்தவர்களில் 10 விழுக்காட்டினர் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில் உண்மையான பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையை இந்நாடுகள் மறைப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய நிலவரம்
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து குணமடையும் விகிதம் 90.34 விழுக்காடாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் புதிதாக கிருமி தொற்றியோர் எண்ணிக்கை மீண்டும் இருநூறாயிரத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது.
கடந்த 44 நாட்களுக்குப் பிறகு அன்றாட எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்திருப்பதாக அந்த அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,893,410 ஆகக் கூடியுள்ளது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 259,459 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடையும் விகிதம் 90.34 விழுக்காடாகவும் உயிரிழப்பு 1.16 விழுக்காடாகவும் உள்ளது. நாடு முழுவதும் 2.34 மில்லியன் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கேரளாவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கணினி, கைபேசி, கண்ணாடி, காது கருவிகள் உள்ளிட்ட பொருட்களை விற்கும் கடைகள் வாரத்தில் 2 நாட்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறப்பானவை என மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

