புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் பயன்படும் உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுவதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அவ்வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் ஆம்புலன்ஸ்களுக்காகவும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காகவும் உயிர்வாயு, மருந்து, தடுப்பூசிகளுக்காகவும் தடுமாறி வருகிறார்கள்.
இந்நிலையில் உயிர்காக்கும் பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் மத்திய அரசு சரக்கு சேவை வரி விதிப்பது அதன் கொடூரத்தையும் உணர்வற்ற நிலையையும் காட்டுகிறது," என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா சிகிச்சையுடன் தொடர்புடைய, பயன்பாட்டில் உள்ள பொருட்களின் பட்டியலையும் தமது பதிவில் வெளியிட்டுள்ளார்.
நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் பிரியங்கா காந்தி இவ்வாறு பதிவிட்டிருந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

