செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
70fe60b5-56f2-4764-96ba-62f81a65f133
-

எடியூரப்பா: என் மீதான புகார்கள் குறித்து கவலைப்படவில்லை

பெங்களூரு: தமக்கு எதிராக கட்சி மேலிடத்தில் சிலர் புகார் தெரிவிப்பது குறித்து தாம் கவலைப்படவில்லை என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்றவர்களை கட்சி மேலிடம் கண்டித்ததாகவும் உரிய பதில் கூறி திருப்பி அனுப்பியதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவில் கொரோனா பரவலைத் தடுப்பதுதான் தமது முதல் பணி என்றும் மற்ற விஷயங்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்றும் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க முயன்று ரூ.79,000 இழந்த ஆடவர்

பெங்களூரு: இணையம் வழி கறுப்புப் பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க முயன்ற ஆயுஷ் அம்ரித் என்ற பொறியியலாளர் 79 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இதுகுறித்து பெங்களூரு போலிசார் விசாரிக்கின்றனர். ஆயுஷ் அம்ரித்தின் உறவினர் ஒருவர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குத் தேவைப்படும் மருந்தை இணையம் வழி வாங்கித் தந்து உதவ நினைத்த ஆயுஷ் அம்ரிஷ், குறிப்பிட்ட ஒரு இணையதளத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசியவர் அறிவுறுத்தியபடி வங்கி மூலம் உரிய தொகையையும் அவர் அனுப்பியதாகத் தெரிகிறது. ஆனால், உரிய நேரத்தில் மருந்து எதுவும் வந்து சேராததால் அவர் காவல்துறையை அணுகி உள்ளார்.

காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு அடைய கேரள அரசு இலக்கு

திருவனந்தபுரம்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் கேரள மாநிலம் காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அம்மாநில ஆளுநர் ஆரிஸ் முகமதுகான் சட்டப்பேரவையில் உரையாற்றியபோது குறிப்பிட்டார். மேலும் கேரளாவில் காய்கறி உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை 60 விழுக்காடு உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோக்கங்களுக்காக வேளாண் நடைமுறைகள், சந்தைப்படுத்துதல் உணவுப் பதப்படுத்தும் தொழிலை ஊக்கப்படுத்துதல், பூங்காக்கள் நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

கங்கை நதிநீர் நிறம் மாறியது

லக்னோ: கங்கை நதியின் நீர் பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதை அடுத்து இது ஆபத்துக்கான அறிகுறி என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வாரணாசி பகுதியில் கங்கை நதியின் நிறம் திடீரென மாறியுள்ளது. நாளடைவில் அந்நீர் நச்சுத்தன்மை உள்ளதாக மாறிவிடக்கூடும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஒருவகை பாசியின் அளவு அதிகரித்ததன் காரணமாக கங்கை நதியின் நிறம் மாறியிருக்கலாம் என்கிறார் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கங்கை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பி.டி. திரிபாதி. நீண்ட காலத்துக்கு கங்கை நதியின் நீரோட்டம் அதிகரிக்காமல் போனால் அது நதியில் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்றும் இவ்வாறு நிறம் மாறுவது மார்ச் முதல் மே மாதம் வரை நிகழக்கூடிய வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுஷில் தாக்கும் காணொளி வெளியானது

புதுடெல்லி: கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில்குமார், கொலையுண்ட இளம் வீரர் சாகர் தன்கத்தை சரமாரியாக தாக்கும் காணொளிப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மே 4ம் தேதி இரவு விளையாட்டு அரங்கில் சுஷில் குமார் கையில் ஒரு மட்டை காணப்படுகிறது. படுகாயமடைந்த தன்கத் கீழே விழுந்து கிடக்கிறார். மேலும் 12 பேர் அங்கே நிற்பதும் பதிவாகியுள்ளது. ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.