இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் பட்டப்பகலில் மருத்துவர் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்த பதற வைக்கும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
மருத்துவர்களான சுதீப் குப்தா-சீமா குப்தா தம்பதி ஜெய்ப்பூரில் உள்ள பாரத்பூரில் எனும் பகுதியில் நேற்று (மே 28) மாலை காரில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரு ஆடவர்கள், அத்தம்பதி இருந்த காரை வழிமறித்தனர். அதிலிருந்து இறங்கிய இருவரும் ஓட்டுநர் சன்னலை அணுகினர். அவ்விருவரில் ஒருவன், மிக நெருக்கத்தில் நின்றவாறு அத்தம்பதியை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினான். இதில் அத்தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
அதையடுத்த அந்த இரு ஆடவர்களும் மோட்டார்சைக்கிளில் ஏறித் தப்பிச்சென்றுவிட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீபா தேவி என்ற 25 வயது இளம் பெண்ணையும் அவரது ஆறு மாத குழந்தையையும் கொலை செய்த வழக்கில் அந்த தம்பதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண போலிசார் முயற்சித்து வருவதாகவும் அவர்களை விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் பாரத்பூர் வட்டார அதிகாரி சதீஷ் வர்மா தெரிவித்தார்.

