பிரதமர் மோடி பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளாமல் அவசரமாக புறப்பட்டுச் சென்றதால் மத்திய அரசு
அதிகாரிகள் அதிருப்தியடைந்தனர்.
புதுடெல்லி: அண்மையில் வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் அருகே கரையை கடந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒடிசா மட்டுமல்லாமல் மேற்கு வங்க மாநிலமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் புயல் ஏற் படுத்திய சேதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
விமானம் மூலமாக ஒடிசா வந்த அவர், பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று அவர் பார்வையிட்டார்.
அதன்பின் மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, அங்கு புயலால் பாதிக்கப்பட்ட தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ், திகா, கிழக்கு மிட்னாபூர், நந்திகிராம் மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா விமானப்படை தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மம்தா சந்தித்தார். அப்போது புயல் பாதிப்புகளை மறுசீரமைப்பு செய்ய 20,000 கோடி ரூபாய் நிவாரண நிதி தேவை என்று மம்தா அறிக்கை ஒன்றை அளித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அதன் பின்னர் அங்கிருந்து மம்தா புறப்பட்டுச் சென்றுவிட்டார். பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்தன.
இது குறித்து பின்னர் பேசிய மம்தா, "பிரதமருடனான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது முதல்வர் அலுவலகத்துக்கு தெரியாது. திகா மாவட்டத்தில் அதிகாரிகளுடன் கூட்டத்துக்கு நேரம் ஒதுக்கி இருந்தேன். பிரதமரை சந்தித்தபோது இது குறித்து தெரிவித்து அவர் அனுமதியுடன் புறப்பட்டேன்," என்றார்.
ஆனால் முதல்வர் மம்தாவின் செயலால் மத்திய அரசு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு பேசிய திரு மோடி, நிவாரணத் தொகையாக ஒடிசாவுக்கு 500 கோடி ரூபாயும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு 500 கோடி ரூபாயும் நிதி ஒதுக்குவதாக அறிவித்தார்.

