கோல்கத்தா: மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளரை மத்திய அரசு திரும்ப அழைத்திருப்பதற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் கோல்கத்தாவில் நடைபெற்ற அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் ஒன்றிலும் அவர் பங்கேற்றார்.
ஆனால், இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை மட்டும் சந்தித்துப் பேசிய பின்னர் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப அழைத்துள்ளது. அவர் மத்திய அரசுப் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக அடைந்துள்ள தோல்வியை பிரதமர் மோடியாலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவாலும் ஜீரணிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் மம்தா, இதன் காரணமாக தனது ஆட்சி மீண்டும் அமைந்த முதல் நாளில் இருந்தே மத்திய அரசு பிரச்சினை செய்து வருவதாக சாடினார்.
"மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பிரதமர் மோடியின் காலில் நான் விழவேண்டும் என்று சொன்னால் அதற்கும் தயாராக இருக்கிறேன். ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்தது குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். "இந்தக் கூட்டம் பிரதமரும் முதல்வரும் பங்கேற்கவேண்டிய கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பாஜக தலைவர்களை ஏன் அழைக்கவேண்டும்?
"குஜராத்திலும் ஒடிசாவிலும் நடந்த இத்தகைய கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை," என்று முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டி உள்ளார்.

