19 ஆயிரம் பேர் பலி; கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஒரு மாதத்துக்குள் கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 29 நாள்களில் அங்கு 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மகாராஷ்டிர சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு கடந்த பத்து தினங்களாக புதிதாக கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.
கொரோனா கிருமித்தொற்றால் மகாராஷ்டிர மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோர், மாண்டோர் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில், ஏப்ரல் மாதத்துக்கு முன்பு கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டிப் பிடித்தது.
நடப்பு மே மாதத்தில்தான் அங்கு கொரோனா உயிரிழப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இம்மாதத்தின் முதல் 29 நாள்களில் மட்டும் 1.1 மில்லியன் பேருக்கு கிருமி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 19,738 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் பலனாக தொற்றுப் பரவல் மெல்ல கட்டுக்குள் வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அம்மாநிலத்தில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 20,295ஆக பதிவாகி உள்ளது. இதேவேளையில் 39,964 பேர் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. அங்கு 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்றுப் பரவல் எதிர்பார்த்த அளவில் குறையவில்லை என்பதால் ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கேரள மாநில நிலவரம்
இதற்கிடையே கேரளாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கேரளாவில் நேற்று முன்தினம் புதிதாக 23,513 பேருக்கு கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 233,034 ஆக கூடியுள்ளது. தொற்றுப் பாதிப்பிலிருந்து 28,100 குணமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 198 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,456ஆக உள்ளது என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

