மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. இந்நிலையில், அக்கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து மும்பையில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மும்பை பகுதி தலைவர் பாய் ஜக்தாப் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் மும்பையின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாய் ஜக்தாப், கொரோனா தடுப்பு மருந்தை பெருமளவில் உலகளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான் என்றார்.
"பிரதமர் மோடியோ உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டார். இதன் காரணமாக மக்கள் தடுப்பூசி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி அந்நாட்டு குடிமக்களுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.
"ஆனால் இந்தியாவில் மட்டும் பணம் கொடுத்தால்தான் தடுப்பூசி போடுகின்றனர். இதை ஏற்க இயலாது," என்று பாய் ஜக்தாப் மேலும் குற்றம் சாட்டினார்.

