ஹைதராபாத்: கொரோனா சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலித்த 10 தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான உரிமத்தை தெலுங்கானா அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணமடைந்த பின்னர் புதிய கொரோனா நோயாளிகளைச் சிகிச்சைக்காக அம்மருத்துவமனைகள் அனுமதிக்க இயலாது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.
தெலுங்கானாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதையடுத்து சுகாதாரத் துறை அம்மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.
மேலும், இத்தகைய புகார்கள் குறித்து சுகாதாரத் துறையின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பத்து தனியார் மருத்துவமனைகள் அரசு விதிமுறைகளை மீறி கொரோனா நோயாளியிடம் அதிக கட்டணம் வசூலித்தது உறுதியானது. அவை சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அம்மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்தானது.
அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தெலுங்கானாவில் மேலும் 21 மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

