மத்திய அரசின் பழி வாங்கும் அரசியல்: மம்தா புகார்

மத்திய அரசின் பழி வாங்கும் அரசியல்: மம்தா புகார்

2 mins read
7fe96ed9-6f9f-40cb-9a44-4f2659182cc5
-

கோல்கத்தா: மேற்கு வங்க அர­சின் தலை­மைச் செய­லா­ளரை மத்­திய அரசு திரும்ப அழைத்­தி­ருப்­ப­தற்கு காங்­கி­ரஸ், திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட கட்­சி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன.

இது மத்­திய அர­சின் பழி­வாங்­கும் போக்கு என முதல்­வர் மம்தா பானர்ஜி கூறி­யுள்­ளார்.

மேற்கு வங்­கத்­தில் 'யாஸ்' புய­லால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளைப் பிர­த­மர் மோடி பார்­வை­யிட்டு ஆய்வு மேற்­கொண்­டார். அதன்­பின்­னர் கோல்­கத்­தா­வில் நடை­பெற்ற அரசு அதி­கா­ரி­க­ளு­ட­னான ஆய்­வுக் கூட்­டம் ஒன்­றி­லும் அவர் பங்­கேற்­றார்.

ஆனால், இந்த ஆய்­வுக் கூட்­டத்­தில் பங்­கேற்­காத முதல்­வர் மம்தா பானர்ஜி, பிர­த­மர் மோடியை மட்­டும் சந்­தித்­துப் பேசிய பின்­னர் புறப்­பட்­டுச் சென்­றார்.

இந்­நி­லை­யில் மேற்கு வங்­கத் தலை­மைச் செய­லா­ளர் அல­பன் பந்­தோ­பாத்­யாவை மத்­திய அரசு உட­ன­டி­யாக திரும்ப அழைத்­துள்­ளது. அவர் மத்­திய அர­சுப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட இருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதையடுத்து, மேற்கு வங்­கத் தேர்­த­லில் பாஜக அடைந்­துள்ள தோல்­வியை பிர­த­மர் மோடி­யா­லும் உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வா­லும் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள முதல்வர் மம்தா, இதன் கார­ண­மாக தனது ஆட்சி மீண்­டும் அமைந்த முதல் நாளில் இருந்தே மத்­திய அரசு பிரச்­சினை செய்து வரு­வ­தாக சாடி­னார்.

"மாநி­லத்­தின் வளர்ச்­சிக்­கா­க­வும் முன்­னேற்­றத்­துக்­கா­க­வும் பிர­த­மர் மோடி­யின் காலில் நான் விழ­வேண்­டும் என்று சொன்­னால் அதற்­கும் தயா­ராக இருக்­கி­றேன். ஆய்­வுக் கூட்­டத்­தைப் புறக்­க­ணித்­தது குறித்து சிலர் விமர்­சிக்­கி­றார்­கள்.

"இந்­தக் கூட்­டம் பிர­த­ம­ரும் முதல்­வ­ரும் பங்­கேற்­க­வேண்­டிய கூட்­ட­மாக இருந்­தி­ருக்க வேண்­டும். ஆனால், பாஜக தலை­வர்­களை ஏன் அழைக்­க­வேண்­டும்?

"குஜ­ராத்­தி­லும் ஒடி­சா­வி­லும் நடந்த இத்­த­கைய கூட்­டங்­களில் எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் அழைக்­கப்­ப­ட­வில்லை," என்று முதல்வர் மம்தா பானர்ஜி சுட்­டிக்காட்­டி­ உள்ளார்.