போராடும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு மோடி பாராட்டு
புதுடெல்லி: பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது இரவும் பகலும் உழைத்து வருவதாக பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், கொரோனா இரண்டாம் அலையை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு அதை முறியடிக்கும் என்றார். மேலும் புயல், மழைக் காலங்களில் துணிச்சலோடு மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பேரிடர்களில் சிக்கி உற்றார் உறவினரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் புதிய விதிமுறை: இதுவரை ஏற்காத டுவிட்டர்
புதுடெல்லி: சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கு அந்நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு அரசின் புதிய விதிமுறைக்கு இணங்குவதாக கூகள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. டுவிட்டர் நிறுவனம் மட்டும் விதிமுறைகளை இன்னும் ஏற்கவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக புதிய விதிமுறைகளை ஏற்க மத்திய அரசு இந்நிறுவனங்களுக்கு 90 நாள் கால அவகாசம் வழங்கி இருந்தது.
120 அரசு பள்ளி ஆசிரியர்கள் பலி
புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலையால் டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 120 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் அம்மாநிலக் கல்வித்துறை 92 ஆசிரியர்கள் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியர்களின் பட்டியலை அரசிடம் அளித்திருப்பதாகவும் விரைவில் கல்வித்துறை திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலை வெளியிடும் என்றும் டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. "பலியான ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும். எனவே உயிரிழந்த அனைத்து ஆசிரியர்களின் குடும்பத்தாரிடமும் பேசி வருகிறோம். கிருமித்தொற்றுக்குப் பலியான ஆசிரியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்," என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

