புதுடெல்லி: வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக 120 மில்லியன் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மே மாதம் 79.4 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 212 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதேவேளையில் நாட்டில் உள்ள 1.35 பில்லியன் மக்கள் தொகையில் 3 விழுக்காட்டினருக்கு மட்டுமே இரு தவணைகளுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் பெறக்கூடிய தடுப்பூசிகளையும் சேர்த்து வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் இரண்டு பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அரசாங்கத்தின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் முன்களப் பணியாளர்களுக்குப் போடும் வகையில் 60.9 மில்லியன் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்க உள்ளது மத்திய அரசு. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்தத் தடுப்பூசிகள் போடப்படும்.
மேலும் 58.6 மில்லியன் தடுப்பூசிகளை மாநிலங்களும் தனியார் மருத்துவமனைகளும் மத்திய அரசிடம் இருந்து நேரடியாக வாங்க முடியும் என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

