புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் நாடு முழுவதும் சுமார் 10 மில்லியன் பேர் வேலை இழந்திருப்பதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், 97 விழுக்காடு குடும்பங்கள் வருமான இழப்பை சந்தித்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வேலையிழப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் உருவாகவில்லை என்றும் அந்த மையத்தின் தலைவர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத இறுதியில் 8 விழுக்காடாக இருந்த வேலையிழப்பு விகிதம் மே மாதம் 12 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
"முந்தைய நிலையை ஒப்பிட்டால் 97 விழுக்காடு குடும்பங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினருக்கு வெவ்வேறு விதமாக உள்ளது. ஊரடங்கு வேளையில் தினக்கூலி வாங்கும் தொழிலாளர்களும் சிறு தொழில் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
"புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால், வேலையின்மை விகிதம் மேலும் அதிகரிக்கும். அதனால் நகர்ப்புறங்களில் வேலையின்மையின் தாக்கம் கடுமையாக இருக்கும்," என்று மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 விழுக்காடாக சரிந்துள்ளது என்றும் நான்காம் காலாண்டில் 1.6% உயர்ந்துள்ளது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது என்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2020 ஜூலை மாதம் ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவிக்கத் தொடங்கியதை அடுத்து பொருளாதாரம் மீண்டும் படிப்படியாக ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது என அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

