மும்பை: மகாராஷ்டிராவில் கிருமித் தொற்று பாதிப்பு சீராக குறைந்து வருவதால் அம்மாநில அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் வணிக வளாகங்கள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்தக் கடைகள் திறந்திருக்கும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் தனிக்கடைகளைத் திறப்பது குறித்து அந்தந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை, பூனே நகரங்களில் நேற்று அனைத்து வகையான கடைகளும் திறக்கப்பட்டன. அவ்விரு மாநகராட்சி நிர்வாகங்களும் காலை 7 முதல் மதியம் 2 மணி வரை காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளன.
வரும் 15ஆம் தேதி வரை இந்த அறிவிப்பும் அனுமதியும் அமலில் இருக்கும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதேபோல் புனே நகரிலும் செவ்வாய்க்கிழமை தொடங்கி அடுத்த 10 தினங்களுக்கு, காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளைத் திறக்கலாம் என புனே மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மேலும் மதுக்கடைகளும் அங்கு திறக்கப்பட உள்ளன.
நாசிக், நாக்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் வணிக வளாகங்கள் தவிர்த்து இதர அனைத்து வகை கடைகளையும் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடகாவில் கொரோனா தொற்றுப் பரவல் விகிதம் குறைந்திருப்பதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்க இருப்பதாக அம்மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
50 விழுக்காடாக இருந்த தொற்றுப்பரவல் விகிதம் அம்மாநிலத்தில் இப்போது 15 விழுக்காடாக குறைந்துள்ளது. மைசூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து 5ஆம் தேதிக்கு முன்பு ஊரடங்கு குறித்து கர்நாடக அரசு புதிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என கர்நாடக அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

