செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b96f710e-10c7-45fb-8f99-55c297e78829
-

கொரோனாவில் இருந்து மீண்ட பெண் பாலியல் பலாத்காரம்

கௌஹாத்தி: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 40 வயது பெண்மணி வீடு திரும்ப வாகனம் கிடைக்காததால் நடந்து சென்றபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அசாம் மாநிலத்தின் சாரைடியோ மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் தனது மகளுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டார். மருத்துவமனையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது இரவு 7 மணி அளவில் இரு ஆடவர்கள் இருவரையும் வழிமறித்துள்ளனர். மகள் தப்பியோடிய நிலையில் அந்தப் பெண்மணியை அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்துக்குத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அவ்விரு ஆடவர்களும் கைதாகி உள்ளனர்.

சுரங்கத்தில் மண்ணில் புதைந்த 6 பேர்

ஷில்லாங்: அனுமதி இன்றி நடைபெற்ற சுரங்கப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்தனர். மேகாலயாவில் உள் ஜெயின்சியா மலைப்பகுதியில் அகலம் குறைவாக உள்ள சுரங்கத்தில் அனுமதி இன்றி சில பணிகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை இரவு அசாமைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு பகுதியில் மண் சரிந்து விழுந்ததில் சுரங்கம் மூடிக்கொண்டது. இதில் 6 தொழிலாளர்களும் மண்ணில் புதைந்தனர். மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் 6 பேரின் கதி என்னவானது என்பது இன்னும் தெரியவில்லை.

மருத்துவமனையில் கல்வி அமைச்சர்

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அண்மையில் கிருமித்தொற்று ஏற்பட்டது. பின்னர் அதிலிருந்து குணம் அடைந்தார். இந்நிலையில் தொற்றுக்குப் பிந்தைய பாதிப்புகள் காரணமாக ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைமைச் செயலாளர் மம்தாவின் தலைமை ஆலோசகராக நியமனம்

கோல்கத்தா: மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த அலபன் பந்தோபாத்யாயா திடீரென பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து அவர் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அலபன் பந்தோபாத்யாயாவை மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப அழைப்பதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் மே 31ஆம் தேதி காலை டெல்லி செல்ல வேண்டிய நிலையில் தாம் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அலபன் பந்தோபாத்யாயா தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு அவர் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்படுவதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.