61 நாட்களுக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவு
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்துவரும் நிலையில் இந்தியாவில் முக்கிய நகரங்களில் வர்த்தக, தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நேற்று சாலைப் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது. மும்பையில் பேருந்து சேவைகள் தொடங்கி உள்ளன. இதேபோல் டெல்லியில் மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கின.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 100,636 பேரை கிருமி தொற்றியுள்ளது. கடந்த 61 நாட்களில் பதிவான ஆகக் குறைவான தொற்று எண்ணிக்கை இதுவாகும்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வரை நாள்தோறும் 4 லட்சம் புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வந்தன. இதையடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் இரண்டு மாத போராட்டத்துக்குப் பிறகு தொற்று விகிதம் குறையத் தொடங்கி உள்ளது.
"கிருமித்தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் பொருளாதாரத்தையும் மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்," என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள கடைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அலுவலகங்கள் இயங்கவும் 50 விழுக்காடு பயணிகளுடன் மெட்ரோ ரயில்களை இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் உணவகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களை மூடுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 2,427 பேர் கிருமித்தொற்றால் பலியாகி உள்ளனர். கடந்த ஏப்ரலில் தினந்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் இப்போது இறப்போர் எண்ணிக்கையும் ஓரளவு குறைந்துள்ளது.
இதேவேளையில் பாதிக்கப்பட்டோர், உயிரிழப்போர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுவதாக 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அனைத்து வணிகங்களும் தொழில்களும் நண்பகல் வரை செயல்படலாம் என்றும் 50 விழுக்காடு ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைப் போலவே மகாராஷ்டிராவிலும் உடற்பயிற்சிக் கூடங்கள் சிகையலங்காரக் கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
இந்தியாவின் 1.4 பில்லியன் குடிமக்களுக்குத் தடுப்பூசி போடு
வதில் அதிகாரிகள் பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் கொரோனா மூன்றாவது அலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதே தற்போதுள்ள ஒரே வழி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பல மில்லியன் மக்கள் தினக்கூலி பெற்று தங்களுக்குரிய உணவை வாங்குகின்றனர், தங்குமிடத்துக்கான வாடகையைச் செலுத்துகின்றனர். எனவே அனைத்து பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் துவங்க வேண்டும் என்பதற்கான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வடமாநிலங்களில் சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பொருளியல் நடவடிக்கைகள் துவங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

