புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிதாக கிருமி தொற்றியோர் எண்ணிக்கை நூறாயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. 92,596 பேருக்கு புதிதாக கிருமி தொற்றிய நிலையில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனாக உள்ளது என்றும் நேற்று முன்தினம் 162,664 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளையில் கிருமித்தொற்றால் 2,219 நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர். நாட்டின் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 353,528ஆக கூடியுள்ளது.
63 நாட்களுக்குப் பின்னர் கொரோனா கிருமித்தொற்றின் அன்றாட எண்ணிக்கை நூறாயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருவது மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
இதற்கிடையே, மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொடுக்கப்படும் தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்துவிட்டால் அது ஒதுக்கீடுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதி படைத்தவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.
"தடுப்பூசி போடுவதில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஜூன் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்," என்றும் மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.
மாநில நிலவரங்கள்
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அம்மாநில அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்தே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பலனளித்துள்ளது. அங்கு அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. அதேசமயம் நோயிலிருந்து மீண்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் கிருமித் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கு 9,808 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. ஒரே நாளில் 179 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். இதையடுத்து ஒட்டுமொத்த மரண எண்ணிக்கை 32,099ஆக கூடியுள்ளது. எனினும் ஒரேநாளில் 23,449 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே மூன்றாவது அலைக்கு முன்பு ஒடிசாவில் தினமும் 3 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அன்றாட தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிவு

