புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த ஏதுவாக 440 மில்லியன் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது.
அவற்றுள் 250 மில்லியன் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் என்றும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 190 மில்லியன் கோவேக்சின் தடுப்பூசிகள் வாங்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாக வாங்கி அவற்றை மாநில அரசுகளுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் எனப் பரவலாக எழுந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது மத்திய அரசு.
இதையடுத்து தடுப்பூசி போடும் நடவடிக்கையை வேகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன் முதற்கட்டமாக சீரம் இந்தியா, பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களிடம் இருந்தும் பெரிய எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் வாங்கப்படுகின்றன. அதன்படி 440 மில்லியன் தடுப்பூசிகளுக்கான தொகையை மத்திய அரசு செலுத்துகிறது.
இந்த தடுப்பூசிகள் டிசம்பர் 2021 வரை பொதுமக்களுக்குச் செலுத்தப்படும். இந்நிலையில், கூடுதலாக கொள்முதல் செய்வதற்கான 30 விழுக்காடு முன்பணம் இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழ் ஹிந்து இணையத்தளச் செய்தி தெரிவிக்கிறது.
தற்போது நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த நடவடிக்கை மேலும் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

