புதுடெல்லி: எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் வலியுறுத்தி உள்ளார்.
இணையம் வழி பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றார்.
இதற்கிடையே லடாக் எல்லைப் பகுதியில் சீனப் போர் விமானங்கள் திடீரென பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
"இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது புதிய விஷயமல்ல. பேச்சுவார்த்தை, கலந்தாலோசிப்பு மூலம் எல்லைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணமுடியும் என பெய்ஜிங் நிர்வாகம் கருதுகிறது," என சீனத் தூதர் சன் வெய்டோங் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று உரிய மரியாதை தரவேண்டும். பிரச்சினைகளுக்கு இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும். அதேவேளையில் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான அம்சங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்," என்று சீனத் தூதர் சன் வெய்டோங் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழ்ந்தது போலவே சீன ராணுவம் இப்போது செயல்பட்டு வருவதாக இந்திய தரப்பில் புகார் எழுந்துள்ளது. எல்லையில் இருந்து படைகளை படிப்படியாக திரும்பப்பெறும் நடவடிக்கையை சீனா முழுமையாக மேற்கொள்ளவில்லை என இந்தியா சாடியுள்ளது.
இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் 22 போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. தங்கள் எல்லைக்குட்பட்ட வான் பரப்பில் மட்டுமே இந்தப் பயிற்சியை மேற்கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதி பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக இந்திய விமானப்படை மிக் 29, சுகோய் 30, ரஃபேல் விமானங்களை நாட்டின் முக்கிய விமானப்படைத்தளங்களில் தயார்நிலையில் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

