செய்திக்கொத்து

2 mins read
9c4740d9-cd35-4704-a494-2eaf23a02bf6
-

இரு வாகனங்கள் மோதல்: 17 பேர் பலி

லக்னோ: இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் பலியாகிவிட்டனர். இந்தச் சோக சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோவில் இருந்து 20 பயணிகளுடன் டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று கான்பூர் மாவட்டத்தை அடைந்தபோது நெடுஞ்சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த மற்றொரு வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பேருந்துப் பயணிகள் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

யாஷ் புயலால் 7.5மி. பேர் பாதிப்பு

புவனேஸ்வர்: யாஷ் புயல் காரணமாக ஒடிசாவில் 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் 11 மாவட்டங்களில் உள்ள 10,644 கிராமங்களில் வசித்து வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. மேலும், 26,781 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஏழு துறைகளைச் சார்ந்த ஏழு மூத்த உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதாகவும் ஒடிசா அரசு கூறியுள்ளது.

தேர்தல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சந்திர பாண்டே நியமனம்

புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே 14ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அனுபவம் கொண்ட சந்திர பாண்டே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கி 27 பேர் பலி

கோல்கத்தா: மின்னல் தாக்கி மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 27 பேர் உயிர் பலியாகிவிட்டனர். அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு சம்பவங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக முர்சிதாபாத்தில் 10 பேரும், ஹூக்ளியில் 11 பேரும் மின்னல் தாக்கி இறந்ததாக மேற்கு வங்கப் பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் ஜாவேத் அகமத் கான் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.