செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e00f5414-b3e7-4b8e-9861-0aebc6836ec1
-
Google News Preferred Icon

விதிமுறைகளை ஏற்கிறது 'டுவிட்டர்'

புதுடெல்லி: மத்திய அரசு வகுத்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்றுச் செயல்பட டுவிட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசுக்கு அந்நிறுவனம் கடிதம் வழி தெரியப்படுத்தி உள்ளது. அதில், புகார்களை விசாரிப்பதற்கென இந்திய அதிகாரி ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மற்ற விதிமுறைகளை ஏற்று அதன்படி செயல்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், அடுத்த ஒரு வாரத்தில் இதுதொடர்பான விவரங்களைத் தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

விமானக் கடத்தல் என மிரட்டல்

போபால்: இந்தூர், போபால் விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்போவதாக மிரட்டல் விடுத்த ஆடவரை போபால் நகர போலிசார் கைது செய்தனர். 34 வயதான அந்த ஆடவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மிரட்டல் காரணமாக அவ்விரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது வெற்று மிரட்டல் எனப் போலிசார் தெரிவித்தனர்.

ராகுல்: ஒரே வழிதான் உள்ளது

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மட்டுமே விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரே வழி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயத்தை பாதுகாக்க பல விவசாயிகள் உயிரிழந்துள்ள போதிலும் அவர்களின் போராட்டம் அச்சமின்றி நீடித்து வருவதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரூ.276 கோடி நிதி திரட்டிய பாஜக

புதுடெல்லி: கடந்த 2019-20 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆக அதிகமாக பாஜக ரூ.276 கோடி நிதி திரட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.58 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள 35 மாநில கட்சிகள் நன்கொடை பெற்ற விவரங்களை தாக்கல் செய்துள்ளன.