திருவனந்தபுரம்: கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பில் மேலும் ஒரு முக்கியக் குற்றவாளி தேசிய புலனாய்வு முகமையிடம் சிக்கி உள்ளார்.
முகமது மன்சூர் என்ற அந்த ஆடவர் துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அதிரடியாகக் கைதானார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு சிற்றரசு தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் நடந்து வந்துள்ளது.
இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், முகமது ஷஃபி உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைதாகினர்.
இந்தக் கடத்தலில் கேரள அரசியல் பிரமுகர்கள் பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கக் கடத்தல் நடவடிக்கையின் மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவரான முகமது மன்சூர் தற்போது சிக்கி உள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது ஷஃபி உள்ளிட்ட பலருடன் இணைந்து முகமது மன்சூர் தங்கம் கடத்தி வருவதில் முக்கியப் பங்காற்றியதாக நம்பப்படுகிறது.
இதன் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

