கோலாலம்பூர்: ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு மலேசியாவில் அவசரநிலையை நீட்டிக்கக்கூடாது என்றும் நாடாளுமன்றத்தைக் கூட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் மலேசிய மாமன்னரிடம் அம்னோ கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இஸ்தானா நெகாராவில் நேற்று மூன்றாவது நாளாக மாமன்னர் அப்துல்லா, அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அவ்வகையில் நேற்றுக் காலைகிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மாமன்னரை டாக்டர் ஸாஹிட் சந்தித்துப் பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலன் தொடர்பான பல விஷயங்கள் குறித்து மாமன்னரிடம் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டார்.
அப்போது, ஆகஸ்ட் முதல் தேதிக்குப் பிறகு அவசரநிலையை நீட்டிக்கக்கூடாது என்றும் மாறாக, அவசரநிலையை நீக்கிவிட்டால் கொவிட்-19 பரவல் சார்ந்த விஷயங்களைச் சிறப்பாகக் கையாளலாம் என்றும் அம்னோவின் நிலைப்பாட்டைத் தாம் மாமன்னரிடம் தெளிவாக எடுத்துரைத்ததாக டாக்டர் ஸாஹிட் சொன்னார்.
"நாட்டின் ஜனநாயகத்தைத் தற்காப்பதை உறுதிசெய்ய நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்," என்றார் அவர்.
முன்னதாக, மாமன்னரை நேற்று முன்தினம் சந்தித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது, தேசிய நடவடிக்கைகள் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அம்மன்றத்தின் தலைவராகப் பொறுப்பேற்கவும் அவர் முன்வந்தார்.
இந்நிலையில், அதுகுறித்து தாம் மாமன்னரிடம் விவாதிக்கவில்லை என்று டாக்டர் ஸாஹிட் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று முற்பகலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மாமன்னரைச் சந்தித்த மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அதன்பின் செய்தியாளர்களைச் சந்திக்காமலேயே சென்றுவிட்டார்.

