லண்டன்: பணக்கார 'ஜி7' நாடுகள் ஒரு பில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க ஒத்துக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 500 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உறுதியளித்துள்ள நிலையில், குறைந்தது 100 மில்லியன் கூடுதல் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு பிரிட்டன் வழங்கும் என்று ஜான்சன் கூறியிருக்கிறார்.
ஜி7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சநிலை மாநாடு பிரிட்டனின் கார்ன்வாலில் நேற்று தொடங்கவிருந்தது. முன்னதாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட ஜி7 நாடுகள் கடப்பாடு கொள்ள வேண்டும் என்று திரு ஜான்சன் அறைகூவல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மூன்று நாள் மாநாட்டின்போது ஒரு பில்லியன் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க ஜி7 நாடுகள் உறுதிபூணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்நன்கொடைத் திட்டத்தை 'பெருங்கடலில் ஒரு துளி' என வருணித்து, சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலகம் முழுதும் ஏறத்தாழ நான்கு பில்லியன் மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு 'கொவேக்ஸ்' திட்டத்தைச் சார்ந்திருப்பதாக ஆக்ஸ்ஃபம் அமைப்பு தெரிவித்து இருக்கிறது. அத்திட்டத்தின்மூலம் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பிரிட்டன் வழங்கும் நூறு மில்லியன் தடுப்பூசிகளில் 80 மில்லியன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'கொவேக்ஸ்' திட்டத்திற்குச் செல்லும். எஞ்சிய 20 மில்லியன் தடுப்பூசிகள், தேவைப்படும் நாடுகளுக்கு இருதரப்பு முயற்சிகள்மூலம் பகிர்ந்துகொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
கடும் கட்டுப்பாடுகள்
இவ்வேளையில், கடந்த ஈராண்டுகளில் முதன்முறையாக நடைபெறும் ஜி7 உச்சநிலை மாநாட்டில் கடும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். அவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியேனும் போட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் சிறப்புப் பங்கேற்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா, இந்தியா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

