9 மி. ரிங்கிட் போதைப்பொருள் சிக்கியது
கோலாலம்பூர்: மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப்பொருள்களைப் புழக்கத்தில் விட்ட கணவன், மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 98.35 கிலோ ஹெராயின் உட்பட 9,345,903 ரிங்கிட் மதிப்புடைய போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன; ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பான திரைப்படத்திற்கு எதிர்ப்பு
வெலிங்டன்: கடந்த 2019 மார்ச் 15ஆம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. அத்தாக்குதல்களில் 51 பேர் மாண்டனர். 'தே ஆர் அஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம், தாக்குதல் தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் எடுத்த நடவடிக்கைகளை மையமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அத்தாக்குதல் ஏற்படுத்திய துயரத்திலிருந்து இன்னும் பல குடும்பங்களும் முஸ்லிம் சமூகமும் மீளவில்லை எனக் கூறி, நியூசிலாந்து முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பேருந்து விபத்து: 20 யாத்திரிகர்கள் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமய விழாவிற்குப் பின் பக்தர்களுடன் திரும்பிய பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாநிலம், குஸ்தர் மாவட்டத்தின் கார்க் பகுதியில் நேற்று அதிகாலை இவ்விபத்து நிகழ்ந்தது. "அப்பேருந்தில் அளவுக்கதிகமான பயணிகள் இருந்தனர். பேருந்தின் கூரையிலும் சிலர் அமர்ந்திருந்தனர்," என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். மீட்புப் பணிகளை மேற்கொள்ள துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டனர். விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் பத்துப் பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
எல்லையில் சுவரெழுப்பும் டெக்சஸ்
டெக்சஸ்: மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்று அமெரிக்காவின் டெக்சஸ் மாநில ஆளுநர் கிரெக் அபட் அறிவித்துள்ளார். ஆயினும், குடியேறிகளைத் தடுப்பதற்காக எல்லையில் சுவரெழுப்ப அம்மாநிலத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றபின், எல்லைப் பகுதியில் உள்ள ஒரு சிறு நகரில் அதிகளவில் குடியேறிகள் புகுந்து விட்டதாகக் குறிப்பிட்ட அபட், சுவர் குறித்த விவரங்களை அடுத்த வாரம் அறிவிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு சுதந்திரதேவி சிலை
பாரிஸ்: பிரான்ஸ்-அமெரிக்க நட்புறவை நினைவுகூரும் விதமாக, மூன்று மீட்டர் உயரம் கொண்ட சுதந்திரதேவி சிலையை பிரான்ஸ், அமெரிக்காவிற்கு அனுப்பியிருக்கிறது. 454 கிலோ எடை கொண்ட அந்த வெண்கலச் சிலை கடந்த பத்தாண்டுகளாக பாரிசில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரதேவி சிலை 46 மீட்டர் உயரமும் 204.1 டன் எடையும் கொண்டது.
'போலியோ இல்லாத நாடு பிலிப்பீன்ஸ்'
மணிலா: இளம்பிள்ளைவாதம் (போலியோ) இல்லாத நாடாக பிலிப்பீன்ஸ் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பீன்சில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இளம்பிள்ளைவாதம் தலை காட்டாத நிலையில், கடந்த 2019ல் அங்கு அந்நோய் மீண்டும் கண்டறியப்பட்டது. குறைந்தது 17 பேர் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, நாடு முழுதும் மில்லியன்கணக்கான குழந்தைகளுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கடந்த 16 மாதங்களாக இளம்பிள்ளைவாதத்தால் அங்கு வேறு எவரும் பாதிக்கப்படாததை அடுத்து, அந்நாட்டில் அந்நோய் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டதாக பிலிப்பீன்சுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

