கோல்கத்தா: பங்ளாதேஷ் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவினுள் நுழைய முயன்ற சீன ஆடவர், மேற்கு வங்கம், மால்டா பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்டார்.
ஹன் ஜுன்வெய் என்ற இந்த ஆடவர், 2010ல் ஹைதராபாத், 2019க்குப் பின் மும்முறை டெல்லி-குர்கான் என இதற்குமுன் நான்கு முறை இந்தியா வந்து சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆப்பிள் மடிக்கணினி, இரண்டு ஐஃபோன்கள், ஒரு பங்ளாதேஷ் சிம் அட்டை, ஓர் இந்திய சிம் அட்டை, இரண்டு சீன சிம் அட்டைகள், இரண்டு விரலிகள் ஆகியவை இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
ஹன்னும் அவரின் கூட்டாளிகளும் இதற்குமுன் 1,300 இந்திய சிம் அட்டைகளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து, சீனாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்டது. அவை கணக்குகளை முடக்கவும் வேறுவிதமான நிதி முறைகேடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
லக்னோ பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் ஒரு வழக்கில் தேடப்பட்டு வந்ததால் ஹன்னால் இந்திய விசா பெற முடியவில்லை. அதனால், பங்ளாதேஷ் விசா பெற்று, அதன்பின் கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய இவர் முடிவுசெய்தார்.
பொட்டேலி பிரசாந்த் குமார் எனும் இந்தியருடன் இணைந்து, ஹைதராபாத்தில் இவர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
பின்னர் இருவரும் இணைந்து, 2019 அக்டோபரில் குர்கானில் நூறு அறைகளுடன் கூடிய 'ஸ்டார் ஸ்பிரிங்' ஹோட்டலை ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் குத்தகைத் தொகைக்கு, பத்தாண்டு குத்தகைக்கு எடுத்தனர். அந்த ஹோட்டலின் பெரும்பாலான ஊழியர்கள் சீனர்கள் எனக் கூறப்படுகிறது.
ஹன்னிடம் ஆதார் அட்டை இருந்ததால், சீனர் ஒருவரால் எப்படி ஆதார் அட்டை பெற முடிந்தது என விசாரிக்கப்பட்டு வருகிறது.