ஆளுநர் மாளிகைமுன் ஆர்ப்பாட்டம்
சோன்பட்: வரும் 26ஆம் தேதி ஆளுநர் மாளிகைகளுக்கு முன் போராட்டம் நடத்தப்போவதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. "1975 ஜூன் 26ஆம் தேதி இந்தியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இப்போதும் 'அறிவிக்கப்படாத அவசரநிலை' போன்றதொரு சூழல்தான் நிலவுகிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடங்கி, ஜூன் 26ஆம் தேதியுடன் ஏழு மாதங்கள் நிறைவடைகிறது. அந்நாளை 'விவசாயத்தைக் காக்கும், மக்களாட்சியைக் காக்கும்' நாளாக அனுசரிக்கவுள்ளோம்," என்றார் அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் இந்தர்ஜீத் சிங்.
இந்திய வம்சாவளிப் பெண் செய்தியாளர்க்கு புலிட்சர் விருது
புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜ கோபாலன் எனும் அமெரிக்கப் பெண் செய்தியாளர்க்கு உயரிய புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்களை தடுத்து வைக்கும் நோக்கில் சீனா உருவாக்கிய உள்கட்டமைப்புகளைப் பற்றி புலனறிந்து செய்தி வெளியிட்டமைக்கு 'பஸ்ஃபீட் நியூஸ்' நிறுவனத்தில் பணிபுரியும் மேகாவுக்கு இவ்விருது வழங்கப் படுகிறது. நீல் பேடி எனும் இன்னோர் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கும் உள்ளூர்ப் புலனாய்வுச் செய்திப் பிரிவில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்றி வாகன ஓட்டுநர் உரிமம்
புதுடெல்லி: வாகன ஓட்டுநர் உரிமம் பெற இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்முன் வாகனம் ஓட்டிக்காட்டத் தேவையில்லை. சாலைப் போக்குவரத்து அமைச்சின் புதிய விதிமுறையின்படி, அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஓர் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். அடுத்த மாதத்தில் இருந்து இந்தப் புதிய விதி நடப்புக்கு வரவிருக்கிறது.
திரிணாமூல் கட்சிக்கே திரும்பினார்
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல் ஆளாகப் பாஜகவிற்குத் தாவிய முகுல் ராய், அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் திரிணாமூலுக்கே திரும்பினார். தம்மைப் போல் இன்னும் பலர் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் கட்சிக்குத் திரும்புவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளிக்குத் தீ வைத்தவர் கைது
போபால்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர்க்குத் தீவைத்த ஆடவரை போலிஸ் கைது செய்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஏற்கெனவே அவர் தாக்கியதால் ஏற்பட்ட காயத்திற்காகத்தான் அந்நோயாளி சிகிச்சை பெற்று வந்தார்.

