ஆயுதமேந்திய கும்பல் மிரட்டல்; முழு விழிப்புநிலையில் தமிழ்நாடு

ஆயுதமேந்திய கும்பல் மிரட்டல்; முழு விழிப்புநிலையில் தமிழ்நாடு

2 mins read
ea0cedf8-4aa8-4da8-abab-8b3994b9666a
-

இலங்கையில் இருந்து ஆயுத மேந்திய கும்பல் ஒன்று தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ முயல்வதாக மிரட்டல் ஏற்பட்டு இருப்பதை அடுத்து மாநிலத்தில் முழு விழிப்பு நிலை நடப்புக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மத்திய வேவுத்துறை சனிக்கிழமை பின்னேரத்தில் அந்த எச்சரிக்கையை விடுத்தது. அதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய முக்கிய நகர்களில் போலிசார் விழிப்பு நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆயுதங்களுடன் கூடியவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகு ராமேஸ்வரம் நோக்கிச் சென்றதாக வேவுத்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தாலும் அந்தப் படகில் இருந்தவர்கள் யார் என்பதும் அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் துல்லியமாகத் தெரியவில்லை என்று அந்தத் தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய-ஆசிய செய்திச் சேவை நிறுவனம் (IANS) குறிப்பிட்டது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் செயல்படும் மாநில போலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக அந்தச் செய்திச் சேவை நிறுவனம் பல விவரங்களைத் தெரிவித்தது. "எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது உண்மைதான். ஆனால் இதற்கு மேல் எதையும் கூற இப்போதைக்கு இயலாது.

"மாநிலம் முழுவதும் கடலோர பகுதிகளுக்குச் செல்லும் எல்லா முக்கிய சாலைகளிலும் ஆயுதம் தாங்கிய போலிஸ் அதிகாரிகள் பல பணிகளில் பிரித்துவிடப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் கடலோர காவல் படையைச் சேர்ந்த மேலும் பல கப்பல்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

"தமிழ்நாட்டின் கரைக்கு வர மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் முறியடிக்கப்படும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது," என்று அந்த செய்திச் சேவை நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையே, வேவுத்துறை தகவலை அடுத்து கேரளா கடற்கரை முழுவதும் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில போலிஸ் கூறியதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது.