இந்தியா: மரணம் ஏழு மடங்கு அதிகம் என்பது வெறும் யூகம்

இந்தியா: மரணம் ஏழு மடங்கு அதிகம் என்பது வெறும் யூகம்

1 mins read
2257caf4-0ae2-4174-8b8f-c9e96f625cde
-

புதுடெல்லி: இந்தியாவில் அதிகாரபூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையைவிட ஐந்து முதல் ஏழு மடங்கு வரை அதிக இறப்புகள் ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தியை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விளக்கம் அளித்துள்ளது.

பிரபல அனைத்துலக ஊடகம் ஒன்றில் வெளிவந்துள்ள கட்டுரை, எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இன்றி தவறான தகவல்களின் அடிப்படையில், யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தி எக்கனாமிஸ்ட் என்ற அனைத்துலக ஊடகம் அவ்வாறு கட்டுரை வெளியிட்டு இருந்தது. உயிரிழப்புகள் குறித்து அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டவை அல்ல என்பதைச் சுட்டிய இந்திய அரசு, நாட்டில் அன்றாட இறப்பு எண்ணிக்கையை மாவட்ட அளவில் மத்திய சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து சரியான எண்ணிக்கை பதிவாக வேண்டும் என்று அது தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டது.

இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கும்பமேளாவின்போது பக்தர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்திய தனியார் நிறுவனம் பொய்யான தகவல்களை வெளியிட்டு இருப்பதாகச் சொல்லி அது பற்றி புலன்விசாரணை நடத்த உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சனிக்கிழமை புதிதாக கொரோனா கிருமி தொற்றி யோரின் எண்ணிக்கை 80,834 ஆகக் குறைந்தது. மரண எண்ணக்கை 3,303 ஆக இருந்தது. இவர்களையும் சேர்த்து கொரோனா காரணமாக இதுவரை 3.7 லட்சம் பேர் மாண்டுள்ளனர்.