20% செலவைக் குறைக்க உத்தரவு
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு பொருளியல் சரிந்துள்ளதால் கடும் நெருக்கடி உண்டாகி இருக்கிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவற்றின் ஒரு பகுதியாக நடப்பு 2021-2022ஆம் நிதியாண்டில் மத்திய அமைச்சகங்கள் 20% வரை செலவுகளைக் குறைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு விலக்கு உண்டு என்று நிதியமைச்சின்கீழ் செயல்படும் செலவினத் துறை எல்லா அமைச்சுகளிடத்திலும் தெரிவித்துள்ளது.
படிப்பை மீண்டும் தொடர உதவி
புதுடெல்லி: பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் கைவிட்டோர் குறித்த தகவல்களைச் சேகரிக்க, மத்திய கல்வி அமைச்சு 'பிரபந்த்' என்ற வலைத்தளத்தை தொடங்கி உள்ளது. பள்ளிக்கூடங்கள், சிறப்பு பயிற்சி மையங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய, 6-18 வயது வரை உள்ளோரின் விவரங்களை அதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பதிவேற்ற வேண்டும்.
அதன் அடிப்படையில், 6-14 வயது வரையிலான மாணவர்கள், 'சமக்ரா சிக் ஷா' திட்டத்தின்கீழ் பள்ளிக் கூடங்களில் மீண்டும் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய கொரோனா ஆய்வு
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவலை மதிப்பிட இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் நாடு தழுவிய ஆய்வை நடத்த உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. அதுபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும். இதன்மூலம் அனைத்து புவியியல்சார்ந்த தகவல்களையும் பெற முடியும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ்: திறமையற்ற அரசு
புதுடெல்லி: கொவிட்-19 இரண்டாம் அலையின்போது நரேந்திர மோடி அரசின் திறமையின்மையால் நாடே துயரங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
"தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் பொதுச் சுகாதாரத் திட்டத்தை அறிவித்து இருக்க வேண்டிய மத்திய அரசு, பிரதமரின் மாய புகழ் பிம்பத்தைக் காப்பதிலேயே கவனமாக இருந்தது.
"இந்த அரசின் திறமையின்மையால் சகோதர சகோதரிகளை இழந்துள்ளோம். இதை என்றைக்கும் மறக்க மாட்டோம்," என காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப்பில் அரசியல் திருப்பம்
சண்டிகர்: பஞ்சாப்பில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், சிரோமணி அகாலி தளத்துடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து அதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலை பாஜகவுடன் இணைந்து சிரோமணி அகாலிதளம் சந்தித்தது.

