கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பல பெண்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
தாங்கள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அப்பெண்கள் கோரி உள்ளனர்.
மேலும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த இருவர் அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த கோத்ரா கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதை பாதிக்கப்பட்ட பெண்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அதேபோல் மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றிய கூட்டுப் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள், படுகொலைகள் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மெதினிபூரில் உள்ள எனது வீட்டுக்குள் திடீரென சிலர் நுழைந்தனர். பின்னர் ஆறு வயதே ஆன எனது பேரனின் கண் முன்னே என்னைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினர். பின்னர் வீட்டில் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்," என்று 60 வயதுப் பெண்மணி கூறியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அந்தப் பெண்மணி மனு அளித்துள்ளார்.
இதேபோல் மேலும் பல பெண்கள் தாங்கள் கொடூரமாக தாக்கப்பட்டது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதனால் மேற்குவங்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.