செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
8f4bbe05-2947-4520-a63d-d6bdb05f2d75
-

எடியூரப்பா: சட்டவிரோத பங்ளாதேஷ் குடியேறிகளை வெளியேற்றுவேன்

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பங்ளாதேஷ் குடிமக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பங்ளாதேஷ் குடிமக்கள் பலர் கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிப்பது குறித்து தமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். "சட்டவிரோதக் குடியேறிகளை கர்நாடகாவை விட்டு வெளியேற்ற எந்த எல்லை வரை செல்ல வேண்டுமோ அதுவரை சென்று நடவடிக்கை எடுப்பேன். இரும்புக்கரம் கொண்டு அனைவரையும் வெளியேற்றுவேன்," என்று முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

காங்கிரசில் சீர்திருத்தங்கள் தேவை: கபில்சிபல் வலியுறுத்து

புதுடெல்லி: தற்போதைய சூழலில் நாட்டில் பாஜகவுக்கு மாற்றான வலிமையான அரசியல் சக்தி இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியில் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்ற கருத்தை அண்மைய பேட்டி ஒன்றில் அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். "சீர்திருத்தங்கள் மூலம்தான் நாடு ஒரு வலிமையான, நம்பகமான எதிர்க்கட்சியைப் பெறும். மீண்டும் எழுச்சி பெற்ற காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவுக்குத் தேவை. கட்சியின் மத்திய, மாநில அளவில் அமைப்பு முறையில் பரவலான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்," என்று கபில்சிபல் மேலும் குறிப்பிட்டுள்ளார். காங்கிரசால் ஒரு சிறந்த மாற்றத்தை நாட்டில் உருவாக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கபில் சிபல் குறிப்பிட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மின்கம்பி அறுந்து விழுந்து மூன்று சிறுவர்கள், மூதாட்டி பலி

ராஞ்சி: மின்கம்பி திடீரென அறுந்து நால்வர் உயிரிழந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்குள்ள பிப்லா அணைக்கட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் 65 வயது மூதாட்டியும் மூன்று சிறுவர்களும் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. அதில் கால் வைத்த மூதாட்டியும் சிறுவர்களும் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் ஒருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மின்சாரம் தாக்கி ஒரு மாடும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

தொடங்கியது பருவமழை: சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை தொடங்கி உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சில மாநிலங்களுக்கு சிவப்பு, ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா, தெற்கு கர்நாடகா, சட்டீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்று பேரை ஏமாற்றிய திருமணம் செய்த பெண்ணுக்கு வலைவீச்சு

அமராவதி: ஆந்திராவைச் சேர்ந்தவர் சுகாசினி. இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வரும் 29 வயதான சுனில்குமார் என்பவரைக் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் இல்லாத ஆதரவற்ற பெண் என்று அறிமுகம் செய்துகொண்டதால் அவர்மீது பரிதாபப்பட்டுள்ளார் சுனில்குமார். இந்நிலையில் தம்மை சிறுவயதில் இருந்து வளர்த்த மாமாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி சிகிச்சைக்காக சுனிலிடமிருந்து 6 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார் சுகாசினி. அதன்பின்னர் திடீரென மாயமாகிவிட்டார். மனைவியை பல இடங்களில் தேடிய நிலையில், சுகாசினிக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பது சுனிலுக்குத் தெரிய வந்தது. அடுத்த அதிர்ச்சியாக தமக்கு மேலும் ஒருவருடன் திருமணம் நடந்ததாகக் கூறி சில புகைப் படங்களை சுனிலுக்கு அனுப்பி உள்ளார் சுகாசினி. பண விவ காரம் தொடர்பாக காவல்துறை உதவியை நாடினால் பிரச்சினை பெரிதாகும் என்றும் அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துப் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.