கோல்கத்தா: சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர் மேற்கு வங்கத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அம்மனுக்களில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்க அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வன்முறைகளின்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததாகவும் அப்போதுதான் படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மே 2, 3ஆம் தேதிகளில் 16 பேர் வன்முறையில் கொல்லப்பட்டனர். அதேபோல் மே 3, 5ஆம் தேதிகளில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மே 5 முதல் 9ஆம் தேதி வரை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
"நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகளை அறிவிப்பது மே 2ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி வரை நீடித்தது. இதனால் மத்திய ஆயுதப்படை, மாநில காவல்துறை, மாநில சட்டம் ஒழுங்கு என அனைத்துமே மத்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. மேலும் மே 3ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததும் கவனிக்கத்தக்கது," என்று மேற்கு வங்க உள்துறையின் கூடுதல் செயலாளர் நிர்மல்யா கோஷல் தெரிவித்துள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் தேர்தலுக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமானவர்களுடன் மாநில அரசுக்குத் தொடர்பு இருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே விவசாயிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடப் போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அலட்சியமான போக்கால் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"நமது சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவோம்," என்று மம்தா கூறிஉள்ளார்.
தேர்தலுக்குப் பிந்திய வன்முறை: உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

