லக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை மீது சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பவன் பாண்டே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
அயோத்தியைச் சேர்ந்த பாபா ஹரிதாஸ் என்பவர் தமக்குச் சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி இருவருக்கும் இரண்டு கோடி ரூபாய்க்கு அண்மையில் விற்பனை செய்ததாகவும் இந்த நில பேரத்தில்தான் முறைகேடு நடந்துள்ளது என்றும் பவன் பாண்டே கூறியுள்ளார்.
"நில விற்பனை குறித்து தகவல் அறிந்த ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினரான டாக்டர் அனில் மிஸ்ராவும் அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாவும் உடனடியாக சுல்தான் அன்சாரியையும் ரவி மோகனையும் தொடர்பு கொண்டனர். இதையடுத்து இரண்டு கோடி ரூபாய்க்கு தாங்கள் வாங்கிய நிலத்தை அவ்விருவரும் 18.5 கோடி ரூபாய்க்கு ராமர் கோவில் அறக்கட்டளைக்கு விற்றுள்ளனர்," என்பது பவன் பாண்டேவின் குற்றச்சாட்டு.
இந்த நில பேரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
"ஐந்தே நிமிடங்களில் இந்த நில பேரம் நடந்து முடிந்துள்ளது. இரண்டு விற்பனைகளையும் பதிவு செய்வதற்கான பத்திரங்கள் ஒரே தேதியில் வாங்கப்பட்டுள்ளன," என்று சமாஜ்வாடி கட்சியின் எம்பியான சஞ்சய் சிங் சுட்டிக்காட்டி உள்ளார். பல லட்சம் பக்தர்கள் அளித்த நன்கொடையில் இந்த ஊழல் நடந்துள்ளது என்று அவர் சாடியுள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பக் ராய் மறுத்துள்ளார். பொதுமக்களை திசைதிருப்பவும் அரசியல் உள்நோக்கத்துடனும் இப்புகார் எழுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நில முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து விளக்கம் அளிக்குமாறு ராமர் கோவில் அறக்கட்டளைக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

