புதுடெல்லி: இந்தியாவில் சீர்கெட்ட நிலையில் உள்ள 26 மில்லியன் ஹெக்டர் நிலங்கள் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மீட்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
பூமி பாலைவனமாக மாறுவதைத் தடுப்பதற்கான 14-வது ஐநா பொதுச் சபை மாநாட்டில், அந்தமாநாட்டின் தலைவர் என்ற முறையில் காணொளி வழியாக உரையாற்றிய பிரதமர், மனிதர்களுக்கும் பூமிக்கும் நீர்ப்பரப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நிலப்பரப்பும் முக்கியமானது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
இருந்தாலும் நீர்நிலைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படும் அளவுக்கு நிலங்களில் அக்கறை காட்டப்படுவதில்லை என்ற திரு மோடி, இந்தப் போக்கு மாற வேண்டும் என்றும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைக்கும் பூமி வெப்பமாவதைச் சமநிலைப்படுத்துவதற்கும் காடுகள் அவசியம் என்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சம் ஹெக்டர் காட்டு வனப்பரப்பு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதனால் நாட்டின் 4-ல் ஒரு பங்கு நிலப்பரப்பு காட்டுப்பகுதிகளாக மாறியுள்ளது என்றார்.
இந்தியாவில் சீர்கேடு அடைந்துள்ள 26 மில்லியன் ஹெக்டர் நிலங்களை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மீட்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இலக்கை இந்தியா அடையும் பட்சத்தில், 3 பில்லியன் டன் அளவிலான கரியமில வாயுவின் வெளியேற்றத்தை நாடு சமன் செய்ய முடியும் என்று திரு மோடி கூறினார்.

