செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9c0fe608-94f7-4670-acdd-2a1fc8aafeef
-

தங்க நகை: முத்திரை கட்டாயம்

புதுடெல்லி: தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை ஜூன் 16 முதல் கட்டாயம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. அந்த மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை கொண்ட 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பிரச்சினையில் டுவிட்டர்

புதுடெல்லி: இந்தியாவில் சட்டரீதியில் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங் களில் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதன் தொடர்பில் இந்திய அரசாங்கம் பிறப்பித்த புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்து வருகிறது.

இதனால் சமூகவலைத்தளங்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் சட்டரீதியிலான பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, காணொளி ஒன்றை அகற்றும்படி உத்தரப்பிரதேச மாநில நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை மீறியதாக டுவிட்டர் நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

தாஜ்மகாலில் பார்வையாளர்கள்

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மகால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அன்றாடம் இணையத்தில் நுழைவுச்சீட்டு வாங்கிய 650 பேருக்கு மட்டுமே தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க அனுமதி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

5ஜி பரிசோதனை தொடக்கம்

மும்பை: இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் மும்பையில் 5ஜி பரிசோதனையைத் தொடங்கி இருக்கிறது. இதர நகர் களில் பரிசோதனை விரைவில் தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பாரத் ஏர்டெல் நிறுவனமும் அந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்கத் தொடங்கி இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

புதிய கிருமி; கவலை வேண்டாம்

புதுடெல்லி: இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகையான டெல்டா பிளஸ் கொரோனா கிருமி கவலைக்கு உரியதாக இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. கொரோனா கிருமி பல்வேறு வகைகளில் உருமாறி பல நாடுகளில் 2, 3வது அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்துள்ள டெல்டா என்ற கிருமி 2வது அலையில் கடுமையான உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா ப்ளஸ் ஆக தோன்றி இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.