புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றில் இருந்து மீண்டவர் பச்சைப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கடந்த இரு மாதங்களாக கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குணமடைந்த பின்னர் வீடு திரும்பிய அவருக்கு இரு வாரங்களுக்குப் பிறகு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததை அடுத்து அவர் இந்தூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கருதி அவருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஆனால் அதன் முடிவில் அவருக்கு பச்சை பூஞ்சை நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்ததாக அம்மருத்துவமனையின் இதய நோய்த் துறை தலைவரான மருத்துவர் ரவி தோசி தெரிவித்துள்ளார்.
"அனேகமாக இந்தியாவில் இவர்தான் பச்சைப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக இருக்கக்கூடும். இது அரிதாக ஏற்படக்கூடிய நோய். நுரையீரலைத் தாக்கும் ஆபத்து உண்டு. கறுப்புப் பூஞ்சை நோயைக் குணப்படுத்தும் மருந்துகளைக் கொண்டு பச்சைப் பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை அளிக்க இயலாது," என்று மருத்துவர் ரவி தோசி கூறியுள்ளார்.
இதற்கிடையே பூஞ்சை நோய் எந்தெந்த உடல் பாகங்களை அதிகம் பாதிக்கும் என்பதைத் தனித்தனியாக அடையாளம் காணும் பொருட்டு வண்ணங்களின் பெயரால் இந்நோய்கள் குறிப்பிடப்படுகின்றன என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவரான மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

