திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ரகசிய ஆயுதப் பயிற்சி முகாம் நடைபெற்றது தெரிய வந்திருப்பதை அடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
ஏதேனும் தீவிரவாத அமைப்பு இவ்வாறு பயிற்சி அளித்ததா என விசாரணை நடந்து வருகிறது.
கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சில ஆயுதக் குழுக்கள் ரகசிய ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபடுவதாக தமிழக உளவுத்துறை சில மாதங்களுக்கு முன்பு கேரள அரசுக்கு எச்சரிக்கை குறிப்பு அனுப்பி இருந்தது.
அச்சமயம் திட்டக்குடி வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது உறுதியானது. அதில் கேரளாவில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகம், கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது என 'மாத்ருபூமி' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த சில இளையர்களை போலிசார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது அவர்களும் ஆயுதப் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் தமிழக ரகசியப் பிரிவு போலிசார் அளித்த தகவலை அடுத்து திட்டக்குடியில் கேரள போலிசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தீவிரவாதக் குழுக்கள் அங்கு முகாம் அமைத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றபோதிலும் சில வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து தீவிரவாத போக்குடைய சில குழுக்களை கேரள காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் அக்குழுவைச் சேர்ந்தவர்களின் தொலைபேசி அழைப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை கொல்லம் அருகே உள்ள படம் என்ற பகுதியில் வனத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரு ஜெலட்டின் குச்சிகள், நான்கு டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றினர்.
இதேபோன்ற சில வெடிகுண்டுகள் கொன்னி வனப்பகுதியிலும் செவ்வாய்க்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டன. இரண்டு இடங்களில் வெடிபொருள்கள் சிக்கி இருப்பதை அடுத்து பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்புப் படையினர் இரு இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையின்படி கேரள போலிசார் அடுத்தடுத்து சில அதிரடி நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆறு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
இதற்கிடையே, ஆந்திராவில் மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் மம்பா என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது ஆறு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
ஆறு பேரில் இரு பெண்களும் அடங்குவர். மேலும், அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவரும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

