மோடி: அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும்
புதுடெல்லி: உலகம் அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். காணொளி வசதி மூலம் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பெருந்தொற்றின்போது நிலைமையைச் சமாளிக்கவும் தகவல் தொடர்புக்கும் மின்னிலக்கத் தொழில்நுட்பம் அனைவருக்கும் வெகுவாக உதவியது என்றார். "பெருந்தொற்றுக்கு இடையிலும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் துடிப்பான நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த பெருந்தொற்றில் இருந்து இந்த உலகத்தைக் காப்பாற்ற நாம் தயாராக வேண்டும். ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். சவால்களை எதிர்கொள்ள ஒற்றுமை உணர்வுடனும் மனிதம் சார்ந்த அணுகலுடனும் பணியாற்ற வேண்டும்," என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா: கடும் நடவடிக்கை தேவை
புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு நிதியும் பாதுகாப்பும் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், தீவிரவாதமும் தீவிரமயமாக்கலும் உலக நாடுகளின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார். இந்தப் பிரச்சினையை உலக நாடுகள் ஒருங்கிணைந்து சமாளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்றார்.
இந்திய ராணுவம் வெளியிட்ட பாடல்
புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் காணொளி வடிவில் இந்திய ராணுவம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வான் மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல், இந்திய வீரர்களின் துணிச்சலைப் பறைசாற்றுவதாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 'மலைப்பகுதியில் சவால் ஏற்படும்போது கதாநாயகர்கள் விழித்தெழுவார்கள்' எனும் அர்த்தம் கொண்ட வரிகள் அப்பாடலில் இடம்பெற்றுள்ளன. சுமார் ஐந்து நிமிடங்கள் ஒலிக்கும் இந்தப் பாடலின் இடையே லடாக் மலைப்பகுதியில் இந்திய வீரர்கள் எல்லை காக்கும் பணியில் இருக்கும் காட்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மீண்டும் தேர்தல் வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர்
புதுடெல்லி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புதுப்பித்துள்ளது. இருதரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் 2026 வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேரதல்களுக்குப் பிறகு தேர்தல் வியூகம் அமைக்கும் பணியிலிருந்து தாம் விலகப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்நிலையில் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இதன்மூலம் அவர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

