செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5aff86ae-8f70-4acb-992a-cf0f0afeacc2
-
Google News Preferred Icon

அசையாச் சொத்துகளை ஏலம் விடத் தயாராகும் ஏர் இந்தியா

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு உத்தரவு, தொடர் வருவாய் இழப்பு ஆகியவற்றின் காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள தனது அசையாச் சொத்துகளை ஏலம் விட உள்ளதாக அறிவித்து உள்ளது. ெடல்லி, கோல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களில் உள்ள 14 அசையாச் சொத்துகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வாங்க விரும்புவோர் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

அசாம், மணிப்பூரில் நிலநடுக்கம்

சோனிட்பூர்: அசாம், மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் நேற்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமில் சோனிட்பூர், மணிப்பூரில் சாந்தெல், மேகாலயாவின் மேற்கு காசி மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் முறையே 4.1, 3.0 மற்றும் 2.6 என இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

சுந்தர் பிச்சை ரூ.113 கோடி நிதியுதவி

புதுடெல்லி: உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ரூ.113 கோடி நிதியுதவி வழங்குவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உயிர்வாயு உற்பத்தி ஆலைகளை உருவாக்கவும் சுகாதாரப் பணிகளுக்கும் கூகுள் நிறுவனம் ரூ.113 கோடி வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சையின் தாராள குணத்தை பலதரப்பட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர்.

'குழந்தைகளை மூன்றாவது அலை அதிகம் பாதிக்காது'

புதுடெல்லி: கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக உலக சுகாதார ஆய்வு மையம்- எய்ம்ஸ் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளன.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் புனீத் மிஸ்ரா கூறியபோது, "கொரோனா 2ஆம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், திரிபுரா மாநிலங்களின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களைவிட 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. எனவே, மூன்றாவது அலையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் அது அறிகுறியில்லாத பாதிப்பாகவே இருக்கும்," என்றார்.