இந்தியாவில் 24 மணி
நேரத்தில் 60,753 பேர் பாதிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அதே சமயத்தில் தொற்றிலிருந்து கடந்த
24 மணி நேரத்தில் 97,743 பேர் குணம் அடைந்துள்ளனர். கிருமித்தொற்றுக்கு ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து 37வது நாளாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கையைவிட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2.98 விழுக்காடாக உள்ளது.
நீதிபதியை மாற்ற கோரிக்கை
கோல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து கோல்கத்தா உயர் நீதி மன்றத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு இம்மாதம் 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வியடைந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி கவுசிக் சந்தாவை மாற்றக் கோரி கோல்கத்தா உயர்நீதிமன்ற செயல் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டாலுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கவுசிக் சந்தா முன்பு பாஜகவுடன் பணியாற்றியுள்ளார் என்றும் கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக கவுசிக் சந்தா நியமிக்கப்படுவதற்கு கடந்த ஏப்ரல் மாதமே எதிர்ப்புத் தெரிவித்ததையும் மம்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
குஜராத்தில் சுதந்திர சமய
சட்டத்தின் கீழ் முதல் வழக்கு
ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள வடோடாரா நகரப் போலிசார், திருத்தப்பட்ட சுதந்திர சமய சட்டத்தின் கீழ் ஆறு பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று த இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி தெரிவித்தது. இம்மாதம் 15ஆம் தேதி அமலுக்கு வந்த இந்தச் சட்டம், திருமணத்தின் மூலம் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வழி வகுக்கிறது. வடோடாரா போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள 24 வயது பெண், 2018ல் சமூக ஊடகம் மூலமாக ஒருவரைச் சந்தித்ததாகவும் போலியான அடையாள அட்டையைக் காட்டி திருமணத் திற்குப் பிறகு நவீன வாழ்க்கை வாழலாம் என அந்த நபர் ஆசை காட்டியதாகவும் கூறியுள்ளார். பின்னர் ஹோட்டலில் தன்னை நான்கு முறை பாலியல் பலாத்காரம் செய்த அவர், திருமணம் செய்து முஸ்லிம் மதத்துக்கு மாறாவிட்டால் அந்தரங்கப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடு வதாக அவர் மிரட்டியதாக புகாரில் பெண் தெரி வித்துள்ளார். இதையடுத்து அந்த நபரையும் அவரது பெற்றோர், சகோதரி, உறவினர், மற்றொரு நபரையும் போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

