மும்பை: சிவசேனா நிறுவப்பட்ட நாள் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சிந்துதுர்க் மாவட்டத்திலும் நிறுவன நாள் விமரிசையாக நடைெபற்றது. அப்போது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அப்பகுதி சிவசேனா எம்.எல்.ஏ. வைபவ் நாயக், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா எம்.பி. நாராயண் ரானேவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு எரிபொருள் நிரப்ப வந்த வாகன ஓட்டி களுக்குப் பணம் கொடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்து நாராயண் எம்.பி.யின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வைபவ் நாயக் ஆதரவாளர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதன் காரணமாக சிவசேனா-பாஜகவினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்து அங்கு வந்த போலிசார் 2 கட்சியினரையும் கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து சிவசேனா எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் வேறு பெட்ரோல் பங்கிற்குச் சென்று அதே நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிலையில் போலிசார் சம்பவம் குறித்து மோதலில் ஈடுபட்ட சிவசேனா எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள், பா.ஜனதாவினர் சுமார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ராமர் கோவில் கட்டும் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக சிவசேனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதைக் கண்டித்து சில நாட்களுக்கு முன் பாஜகவினர் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரு கட்சியினரும் மீண்டும் மோதிக் கொண்டனர்.

